தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் அறிவிக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தற்போது, எதிர்க்கட்சியான திமுக.,வும் தங்களது தொண்டர்களுக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுக.,வினர் வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, கழக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் வந்து, விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
தற்போது அதிமுகவில் விருப்ப மனுக்களை எல்லா மாவட்டடத்திலும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சில குறிப்பிட்ட தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து விடலாம் என்று அதிமுகவினர் திட்டம் போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, வேலுார் மாநகராட்சி மேயர் பதவியை எஸ்.சி., பெண்கள் பிரிவுக்கு கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அ.தி.மு.க., சார்பில் இங்கு போட்டியிட நிறைய பேர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான வீரமணியிடம் மனு கொடுத்து வருகிறார்கள். ஏற்கனவே, வேலுார் மேயராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கார்த்தியாயினி தற்போது பா.ஜ.கவில் மாநில மகளிர் அணி பொறுப்பாளராக இருக்கிறார்.
ஒரு வேளை வேலூர் மேயர் பதவியை கூட்டணி கட்சிக்கு அதிமுக விட்டு கொடுத்தால், அந்த தொகுதியில் பாஜக அல்லது ஏ.சி.சண்முகம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. கூட்டணி கட்சிக்கு கொடுத்து விட்டால் நாம் செலவு பண்ண தேவையில்லை என்று அதிமுக அமைச்சர் நினைப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவினர் போட்டியிட்டால் எல்லா செலவையும் நாம் தான் பார்க்க வேண்டும், அதனால் கூட்டணி கட்சிக்கு மேயர் பதவியை கொடுத்து விடலாம் என்று அமைச்சர் நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்கின்றனர்.