அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்; இரட்டை இலையே என்றென்றும் வெல்லும். கடமைகள் அழைக்கின்றன; கண்மணிகளே வெற்றி மாலை சூடத் தயாராகுங்கள். வரலாறு வியக்கும் வகையில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தகவல் வருகிறது. நம்மை சோர்வடையச் செய்யும் கருத்துக்கணிப்பு முடிவை நம்பாமல் துணிவுடன் செயல்பட வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் தில்லுமுல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.
முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து தீர்வு காண வேண்டும். கருத்துக்கணிப்பு முடிவுகள் கட்சியின் தொண்டர்களைச் சோர்வடைய செய்வதற்கான முயற்சிகளே தவிர, வேறொன்றும் இல்லை. நம்மை சோர்வடையச் செய்வதற்கான சூழ்ச்சிகள் எதையும் நம்பிவிடாமல், அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும். ஒரு வாக்கு கூட நம்மிடம் இருந்து பறிக்கப்படாத வண்ணம் சுற்றிச் சுழன்று கடமையாற்றுங்கள். வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து, முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் வர வேண்டும்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.