Skip to main content

"தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது" - ஜெயக்குமார் 

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

admk jayakumar talks about erode east by election admk alliance 

 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையர்  சந்திப்புக்கு பின் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயக விரோத செயல்கள், அத்துமீறல்கள், அநியாயங்களை ஆளும்  திமுக அரசு அரங்கேற்றுவதால் அதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 வாக்குச் சாவடிகள் உள்ளன. 238 வாக்குச் சாவடிகளிலும் அதிமுகவின் பொறுப்பாளர்கள் சென்று கள ஆய்வு செய்தபோது அங்கு சுமார்  30,000 முதல் 40,000 வரை உரிய வாக்காளர்கள் இல்லாமல் வாக்காளர் பெயர் பட்டியல் மட்டுமே உள்ளன. இதனை கொண்டு திமுகவினர் வாக்காளர் அட்டையை தயாரித்து போலியாக வாக்கு செலுத்த உள்ளனர். எனவே தேர்தல் ஆணையம் உரிய ஆய்வு செய்து  கணக்கெடுப்பு  நடத்தி உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளோம்.

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் 237வது வாக்குச் சாவடி ரயில்வே காலனியில் உள்ள 180 வாக்காளர்கள் வேறு இடங்களுக்கு  சென்று விட்டனர்.  எனவே அதனை சரி செய்ய வேண்டும். இடம்பெயர்ந்து சென்றவர்கள் வேறு ஒரு இடத்தில் வாக்காளர்களாக பதிவு செய்து இருப்பார்கள். இதனால்  வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு ஏற்பட்டு விடும். இல்லையெனில் அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றோம். பண பட்டுவாடா போன்ற முறைகேடுகளை களைந்து ஜனநாயகத்தை  காக்க வேண்டும் என்றோம். தேர்தல் ஆணையரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

 

நாங்கள் தான் அதிமுக. இரட்டை இலை சின்னம் முடக்க முடியாது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால் அது பற்றி கருத்து சொல்வது ஏற்புடையது ஆகாது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் போட்டி இடுவது என்பது அவரை சார்ந்து இருப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும். அது ஒரு மண் குதிரை என்று. மண் குதிரை கரை சேராது. கூட்டணி தொடர்பான பெயரில் முற்போக்கு என்ற வார்த்தை அச்சுப் பிழை தான். அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. கட்சியின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடுவதில்லை. கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி தர்மம் என்று ஒன்று உள்ளது. அதன்படிதான் நாங்கள் செயல்படுகிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தான் தலைமை. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. 2019 ல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தபோது அதிமுக தலைமையிலான கூட்டணி என்றார். அதில் பாஜகவும் தானே இருந்தது. இன்றைக்கும் இந்த கூட்டணி தொடர்கிறது. பாஜக ஒரு தேசியக் கட்சி. உரிய நேரத்தில் அவர்களின் முடிவை அறிவிப்பார்கள்.  உடனே முடிவை தெரிவிக்க வலியுறுத்த முடியாது. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. தேர்தலை பொறுத்தவரை  முன்வைத்த காலை பின் வைக்க போவதில்லை.

 

கடலில் பேனா சின்னம் அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மீனவர்களால் வலை விரிக்க முடியாது; படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாது.மேலும் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும்.  அரசு பணத்தை விரயம் செய்யாதீர்கள்.  இந்தியாவில் உள்ள கட்சிகளில் அதிக நிதி உள்ள கட்சி திமுக. அறிவாலயத்தில் சின்னத்தை வைத்துக்கொள்ளட்டும்.  80 கோடி ரூபாயை செலவு செய்து எழுதாத பேனா வைப்பது அவசியமா? இது தொடர்பாக நடைபெற்ற கூட்டம் என்பது கருத்து கேட்புக் கூட்டமாக இல்லாமல் திமுகவின் பொதுக் கூட்டமாக மாறிவிட்டது. முழுக்க முழுக்க  சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமல் நடைபெற்ற கூட்டம். பேனா சின்னத்தை அறிவாலயத்தில் அமைத்தால் ஓகே. ஆனால் கடலில் வைத்தால் கடுமையாக எதிர்ப்போம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.