Skip to main content

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக.. மகிழ்ச்சியில் தொண்டர்கள்..!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

ADMK to get petition from candidates for assembly polls


தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்திச் சென்றார். முன்னதாக, கடந்த மாதம் முதலே தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தமது தேர்தல் பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. 

 

ஒருபுறம் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் ‘திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும்’ போன்ற உறுதிகளையும் அளித்துவருகின்றனர். மேலும் ஸ்டாலின் புகார் பெட்டி ஒன்றை அமைத்து, ‘அதில் அளிக்கப்படும் புகார்கள் மீது திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் தீர்வு காணப்படும்’ எனவும் தெரிவித்து வருகிறார்.

 

அதேபோல் அதிமுக சார்பில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரங்களின்போதே எடப்பாடி பழனிசாமி, ‘கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என அறிவித்தார். இப்படி இரு கட்சிகளும் தமிழக தேர்தல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளன. கூட்டணி கட்சிகளும் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவிடம் தங்களுக்கான தொகுதிகளை ஒதுக்குமாறு பட்டியலைக் கொடுத்து காத்துக் கிடக்கின்றன.

 

இந்த நிலையில், இன்று (15.02.2021) அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., “வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், வரும் பிப். 24ஆம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு படிவத்தை வாங்கிக்கொள்ளலாம். பிப். 24 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். விண்ணப்பக் கட்டணம் தமிழகத்திற்கு ரூ.15,000, புதுச்சேரிக்கு ரூ.5,000 மற்றும் கேரளாவிற்கு ரூ.2,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளனர்.  

 

சார்ந்த செய்திகள்