மாநில பா.ஜ.க. சார்பில் 'காண்போம் இனியொரு நல்லாட்சி, காங்கிரஸ் இல்லா புதுச்சேரி' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நடிகை குஷ்பு, “முதலமைச்சர் நாராயணசாமி, ஏன் புதுச்சேரியை இப்படி மாற்றி வைத்துள்ளீர்கள்? காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், லஞ்சம், ரேஷன் கடை மூடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை, 60% பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 57% போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொடுக்காமல் ஆளுநர் மீது குறைகூறி வருகிறார் நாராயணசாமி.
எதிர்க்கட்சியினர் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேல் ஜாதிக்கு மட்டும் தான் பா.ஜ.க முக்கியத்துவம் அளிக்கிறது என்கிறார்கள். கேரளாவில் 21வயது பெண் சேர்மேனாக பதவி ஏற்றது வரவேற்கத்தக்கது. ஆனால் பன்டளம் நகரசபை பெண் சேர்மேனாக சுசிலா சந்தோஷ் (தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்), என்பவரை பொதுத் தொகுதியில் நிற்க வைத்து, ஜெயிக்க வைத்து அழகு பார்த்த கட்சி பா.ஜ.க.
தி.மு.க, காங்கிரஸ் ஜாதி அடிப்படையில் மாவட்டத் தலைவரை தேர்வு செய்கிறீர்கள். இது ஜாதி அரசியல் இல்லையா. ஜாதி, மதம் பார்த்து அரசியல் செய்வது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தான். நான் தி.மு.கவில் தான் அரசியல் பயணத்தை தொடங்கினேன். கலைஞர் சொன்ன விஷயம் யாரையும் தகாத வார்த்தையால் பேசக்கூடாது என்பது. ஜெயலலிதாவைகூட அம்மையார் ஜெயலலிதா என்றுதான் பேச வேண்டும் எனச் சொன்னார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மரியாதையாக ஸ்டாலின் என அழைக்கிறார். ஆனால் ஸ்டாலின், எடுபுடி முதலமைச்சர் எனப் பேசுகிறார். உதயநிதி ஸ்டாலினை தி.மு.கவில் புரொமோட் செய்கிறார்கள். தமிழகத்தில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்க மறுத்தபோது காவலரைப் பார்த்து 'உங்க பேர் என்ன?' என்றும் 'எனக்கு எல்லாம் தெரியும்' என்றும் அந்த போலீஸாரை மிரட்டுகிறார் உதயநிதி. தாத்தா எங்கே? பேரன் எங்கே? நல்ல திட்டங்களைச் செய்ய முடிந்தால் செய்யுங்கள்.
தி.மு.க, காங்கிரஸ் கட்சியினர் என்ன லாபம் வருகிறது என்பதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஊழல் ஆட்சியைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், காங்கிரஸ், தி.மு.க. பேசவே கூடாது. காங்கிரஸ், தி.மு.கவிற்கு பயம் வந்துவிட்டது. வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றி உறுதி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.கவின் வெற்றி காத்திருக்கிறது.
திராவிடம், பகுத்தறிவு எனக் கூறுகிறீர்கள். ஆனால், தினமும் உங்கள் இல்லத்தில் பெண்கள் பூஜை செய்கிறார்கள். நீங்கள் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை மனசாட்சியையும் ஏமாற்றி வாழ்கிறீர்கள். மனசாட்சிக்குப் பயந்து பா.ஜ.க.வினர் வாழ்ந்து வருகிறோம்.
வாழ்க்கையை மேம்படுத்த, பெண்களைப் பாதுகாக்க பா.ஜ.கதான் தேவை. பா.ஜ.க இருந்தால்தான் தலை நிமிர்ந்து வாழமுடியும். இல்லை என்றால் அடிமையாகத்தான் வாழ வேண்டும். இதுதான் ஆரம்பம். வெற்றி விழா கொண்டாட்டத்திற்காக மீண்டும் புதுச்சேரிக்கு வருவேன்” என்றார்.