Skip to main content

முதலமைச்சர் ஸ்டாலினுக்காக டெல்லியில் நடைபெறும் செயல்பாடுகள் - ஆ.ராசா எம்.பி.  விளக்கம்

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

Activities in Delhi for Prime Minister Stalin; MP Explanation of A. Rasa

 

மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அதே நேரம் பாஜக தரப்பினர் இதற்கும் மத்திய அரசிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என தெரிவித்து வருகின்றனர்.

 

நேற்று டெல்லி போலீசார் அறிவித்த தடையை மீறி டெல்லியில் காந்தியின் நினைவிடம் உள்ள ராஜ்காட் பகுதியில் 'சங்கல்ப் சத்தியாகிரக' என்ற பெயரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் தமிழக சட்டப்பேரவைக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டையுடன் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையினை முற்றுகையிட்டும் பதாகைகளை ஏந்தியும் தொடர் முழக்கங்களை எழுப்பி வந்தனர். சேவ் டெமாக்ரசி(save democracy) என்ற பதாகைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏந்தி வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. எதிர்கட்சிகளின் கூச்சல் குழப்பம் காரணமாக எந்த ஒரு விவாதமும் இல்லாமல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வந்த பட்ஜெட் சம்பந்தமான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான அனைத்து ஒப்புதல்களையும் அரசு பெற்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற குழு அமைக்க வேண்டும் மற்றும் ராகுல் பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. ஆ.ராசா, “இந்த அரசாங்கம் ராகுலை தண்டிக்க வேண்டும் என்பதற்காகவே புதிய சட்டவியல் கோட்பாட்டை மறைமுகமாக நிறுவி அவரை தண்டித்துள்ளார்கள். மோடி அரசாங்கத்தில் நாடாளுமன்றத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது. நாடாளுமன்றத்தில் தான் இந்திய மக்களின் உணர்வு வெளிப்படும். அதை மோடி அரசாங்கம் ஒரு பொருட்டாகவே எண்ணியதில்லை. 

 

இன்று எதிர்க்கட்சிகள் எல்லோரும் சேர்ந்து நேரடியாகவும் மறைமுகமாவும் எதிர்க்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய மக்கள் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக இன்று படிப்படியாக திரும்பியுள்ளார்கள். அதனால் தான் திமுகவின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவின் ஜனநாயகத்தை 2024ல் காப்பாற்றப்போகிறார் என்பதற்கு அச்சாரமாக டெல்லியில் அத்தனை செயல்பாடுகளும் நடைபெறுகிறது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்