தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சியின் ஒற்றைத் தலைமை குறித்து ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்களால் ஏற்பட்ட சர்ச்சைத் தொடர்ந்து வருகிறது. இருதரப்பு ஆதரவாளர்களும் தங்களுக்கு ஆதரவான கருத்துக்களை வைத்து போஸ்டர்களை ஒட்டி வருவதோடு, தாங்கள் எந்த பிரிவுக்கு ஆதரவு எனத் தெரிவித்து வந்த நிலையில் நேற்று (24/06/2022) திண்டுக்கல் மற்றும் சின்னாளபட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் அ.தி.மு.க.வின் முதல் எம்.பி. சின்னாளபட்டி மாயத்தேவர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் எடப்பாடி ஆதரவாளர்களைக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விசுவநாதன் ஆகியோர் பகிரங்கமாகவே தங்களுடைய ஆதரவு எடப்பாடியாருக்கு எனத் தெரிவித்த வந்த நிலையில் மாநில முக்குலத்தோர் இளைஞர் பாசறை பெயரில் அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.யும், இரட்டை இலை சின்னத்தைத் தேர்ந்தெடுத்த எம்.பி.யுமான கே.மாயத்தேவர் பெயருடன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மூக்கையாத்தேவர், மாயத்தேவர், ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் வால்போஸ்டர்களை ஒட்டியிருப்பது நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்மந்தமாக, போஸ்டர்களை ஒட்டிய சின்னாளபட்டி அருகே உள்ள எல்லப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் இளைஞர் இளம்பெண்கள் பாசறைத் தலைவர் ராஜேஷிடம் கேட்டபோது, "அ.தி.மு.க.வில் முதன்முதலில் போட்டியிட்டவர் சின்னாளபட்டி மாயத்தேவர். அவர் இரட்டை இலை சின்னத்தைத் தேர்ந்தெடுத்ததால் தான் 1973- ஆம் ஆண்டு முதல் இன்று வரை இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் சின்னமாக உள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் ஓ.பி.எஸ். சிறப்பாகத் தமிழகத்தை ஆட்சி செய்து வந்த நிலையில், குறுக்கு வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் ஆகிவிட்டார்.
அவர் தலைமையில் தேர்தலைச் சந்தித்தபோது அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் தமிழக முதல்வர் கனவோடு அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைக்கிறார், ஒருநாளும் அது நடக்காது. இரட்டை இலை சின்னத்தை வேறு யாருக்கும் நாங்கள் விட்டுத் தர மாட்டோம். எடப்பாடி கையில் அ.தி.மு.க. போனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கட்சியாகி விடும் என்றதோடு, விரைவில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா ஆசியுடன் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்று கூறினார்.
இதுசம்மந்தமாக மாயத்தேவர் மகன் செந்திலிடம் கேட்டபோது, "ஆட்சித் திறமை, கட்சியை நடத்தும் நிர்வாகத்திறமை ஓ.பன்னீர்செல்வத்திற்கு உள்ளது. குறுக்கு வழியில் வந்த எடப்பாடிக்கு அந்த திறமை கிடையாது. பணத்தைக் கொடுத்து கட்சிக்காரர்களை வளைத்துள்ளார். பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது நடைபெற்ற தாக்குதல் திட்டமிட்டது. அவர் மீது வாட்டர்கேன்களை எரிந்துள்ளனர். ஒரு முன்னாள் முதல்வருக்கு அதே கட்சியின் பொதுக்குழுவில் இந்த நிலைமையா? முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? எடப்பாடி தலைமையில் கட்சி (அ.தி.மு.க.) செல்ல விடமாட்டோம். எங்கள் ஆதரவு இருந்தால் தான் அ.தி.மு.க. செயல்படும் என்ற நிலை விரைவில் தமிழ்நாட்டில் உருவாகும். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்படுவார்" என்று கூறினார்.
இதுபோல தென்மாவட்டங்களான மதுரை, தேனி, உசிலம்பட்டி, மட்டப்பாறை, திருமங்கலம், கமுதி, பசும்பொன், சிவகங்கை உட்பட அனைத்து பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி எதிராக போஸ்டர்களை ஒட்டிவருவது அ.தி.மு.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது!