Skip to main content

‘இந்தியா’ கூட்டணியின் 3 வது ஆலோசனைக் கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

3rd Consultative Meeting of India Alliance Preparations are intensive
கோப்புப்படம்

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

 

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜுலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். இதில் 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA- INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) என பெயர் சூட்டப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் 1 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் போது இந்தியா கூட்டணிக்கு என இலச்சினையை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தை சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒருங்கிணைக்க உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்த கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் பிரிவு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்