சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கும் பணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் இன்று (07.06.2021) காலை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, “தமிகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் முடிவடைந்துள்ளது.
தற்போது முதல்வரின் உத்தரவுப்படி சிதிலமடைந்திருக்கும் அனைத்து துறைகளையும் புனரமைக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான கலைஞர் நகரில் உள்ள 5.5 ஏக்கர் நிலங்கள் வாகனம் நிறுத்தும் இடமாக இருந்துவருகிறது என்று கிடைத்த தகவலின் அடிப்படையில், முதல்வரின் உத்தரவோடு அதனை மீட்கும் பணியானது நடைபெற்றது. முதலாவதாக திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் இடங்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டோம். காவல்துறை, மாநாகராட்சி, அறநிலையத்துறை ஆகிய மூன்றின் உதவியோடு ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்.
இந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தி வைத்துள்ளதால் அதனை ஒருநாளுக்குள் அகற்றச் சொல்லி கால அவகாசம் கொடுத்துள்ளோம் அதனைக் காலிசெய்து கொடுப்பார்கள் என நம்புகிறோம். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பதை இந்து சமய அறநிலையத்துறை ஒருபோதும் அனுமதிக்காது. யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இந்து சமய அறநிலையத் துறைக்கு வர வேண்டிய வருமானங்களை யார் மடைமாற்றம் செய்தாலும் அது நிச்சயம் சட்டப்படி மீட்டெடுக்கப்படும். மீட்கப்பட்ட இடத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேறுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஆலோசித்து அதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். அதேபோல் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த 30நாள் ஆட்சியானது வெறும் ட்ரெயிலர்தான் மெய்ன் பிக்சரைப் போகப் போக நீங்களும் தமிழக அரசியல் தலைவர்களும் பார்ப்பீர்கள்’. 100 நாட்களுக்குள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் நிச்சயமாக வெளியிடுவார். திமுக தலைமையிலான இந்த அரசு, தூற்றுவோரும் மிக விரைவில் போற்றும் விதமான வகையில் மாற்றும்” என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.