'20,000 guards are required for this; This alone should not be faulted'-Bamaka Anbumani Ramadoss interview

Advertisment

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை சம்பந்தமான மசோதாவிற்கு உடனடியாக கையெழுத்து இடவேண்டும். இதுவரை தமிழக ஆளுநர் கையெழுத்திடவில்லை. இதற்கு முன்பு அவசர சட்டத்தை கொண்டு வந்தார்கள் அதற்கு கையெழுத்திட்டார். ஆனால் அதன் பிறகு அந்த அவசரச் சட்டம் 6 மாத காலம் தான் இருக்கிறது. ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்றத்தில் சட்டமாக ஆக்கப்பட வேண்டும். இப்பொழுது மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் ஆளுநர் இன்னும் கையெழுத்திடவில்லை. உறுதியாக தமிழக ஆளுநர் கையெழுத்திட்டு இதனை சட்ட வடிவாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது மும்முனை தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஒன்று மது, இன்னொன்று சூது, இன்னொன்று கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் என்பதை மிகப் பெரிய பிரச்சனையாக நான் பார்க்கிறேன்.

நம்முடைய இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விட இன்னும் மோசமான கலாச்சாரங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கஞ்சா, அபின். எங்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் கிடைக்கிறது. தமிழக முதல்வர் மாத மாதம் ஒரு கூட்டத்தைப் போட்டு இதை கட்டுப்படுத்த வேண்டும். இதை தடுப்பது கஷ்டம் ஆனால் கட்டுப்படுத்தலாம். போதுமான காவலர்கள் இல்லை. தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன் 20,000 காவலர்கள் இதற்கு தேவை. இதில் மட்டும் குறை வைக்கக்கூடாது. ஏனென்றால் இது இளைஞர்களுடைய எதிர்காலம். அவசியமாக தமிழக முதல்வர் சிறப்பு கவனம் எடுத்து மாதம் சிறப்பு கூட்டங்கள் வைத்து மாவட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், எஸ் பி எல்லாரையும் கூப்பிட்டு வைத்து பேசி கடுமையான கட்டளைகளை இட வேண்டும்'' என்றார்.