புதுச்சேரி அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டு மணி நேரம் வேலைக் குறைப்பு செய்யப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதன்படி அன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் காலை 9 மணிக்கு பதில் காலை 11 மணிக்கு வேலைக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஆளுநர் தமிழிசை, “முதலமைச்சர் ரங்கசாமியிடம் நான் ஒரு கோரிக்கை வைத்திருந்தேன். பெண்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 2 மணி நேரம் வேலையில் சலுகை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். புதுவையில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களுக்கு செல்வ சலுகையும் உள்ளது. நேர சலுகையும் உள்ளது. ரூ.1000 பணமும் கொடுக்கப்படுகிறது. நேரச் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதனால் பெண்கள் ஆக்கப்பூர்வத்துடனும் ஊக்கமுடனும் பணியாற்றுவார்கள். பெண்களுக்கான இரண்டு மணி நேர வேலை நேரம் குறைப்பு என்பது அரசுத் துறைக்கு சொல்லியுள்ளோம். அரசுத் துறையைப் பார்த்து தனியார் துறையும் பின்பற்றுவார்கள் என நினைக்கிறேன்.” என்றார்.
அதே வேளையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரெங்கசாமி, “பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதுமானது. வெள்ளிக்கிழமை வீடுகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் இருக்கும்” எனத் தெரிவித்தார். பின்னணியில் தமிழிசை சவுந்தரராஜன், “பெண்கள் லேட்டாக வராமல் லேட்டஸ்ட்டாக வரலாம்” எனக் கூறினார்.