பெங்களூருவைச் சேர்ந்த ஹிடேஷா சந்திராணி என்ற பெண் சில நாட்களுக்கு முன்பு, மூக்கில் வழியும் இரத்தத்தோடு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், சொமேட்டோ ஊழியர் தன்னை தாக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்த போலீஸார், சொமேட்டோ ஊழியர் காமராஜை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
ஹிடேஷா சந்திராணி தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த சொமேட்டோ ஊழியர் காமராஜ், அந்தப் பெண் தன்னை அடிமை என திட்டியதாகவும், தன் மீது செருப்பை வீசியதாகவும் கூறினார். மேலும் அந்தப் பெண் தன்னை தாக்கியபோது தடுக்க முயன்றதாகவும், அப்போது அந்தப் பெண்ணின் மோதிரமே அவர் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில், ஹிடேஷா சந்திராணி மீது காமராஜ் காவல்துறையில் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்தப் பெண் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.