ஆந்திர மாநில முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஷர்மிளா போட்டியிடாமல், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து இவர், கடந்த 4 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார். மேலும் அவர் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார். இதனையடுத்து, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ். ஷர்மிளா நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் மாநில அரசின் தலைமைச் செயலக அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்தைத் தடுக்கும் முயற்சியில் ஒய்.எஸ்.ஷர்மிளாவை கைது செய்து வீட்டுக் காவலில் வைக்க ஆந்திரா போலீசார் ஈடுபட்டனர். ஆனால், அவர் நேற்று (21-02-24) இரவு முழுவதும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தங்கிவிட்டார்.
இதனை தொடர்ந்து, ஆந்திரா தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை விஜயவாடாவில் இன்று (22-02-24) அவர் தொடங்கினார். இதனால், ஷர்மிளாவையும், காங்கிரஸ் கட்சியினரையும் போலீசார் தடுக்க முயன்ற போது தடையை மீறி அவர் முற்றுகை போராட்டத்தை நடத்த முயன்றார். இதனால், அவரை போலீசார் குண்டுக் கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்கள் ஆந்திரா அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.