பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கர்நாடகா வந்திருந்த பிரதமர் மோடிக்கு பாஜக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலை வழியாக திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடி பேரணி மேற்கொண்டார். இதில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பரசவராஜ் பொம்மை ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து பெங்களூருவில் மெட்ரோ புதிய ரயில் பாதையை மோடி திறந்து வைத்தார். கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சாலையில் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்களை பார்த்து கை அசைத்துக்கொண்டு சென்ற நிலையில் கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர் பிரதமரின் கான்வையை நோக்கி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.