உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வரும் நிலையில் அம்மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கொள்ளைகளும், கொலைகளும் அரங்கேறி வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகக் கூறினாலும், பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் நடந்துகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோண்டா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப், முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் காரில் வலுக்கட்டாயமாக்க ஏற்றி, ஓடும் காரிலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த நேரத்தில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள மின்கம்பத்தில் மோதி நின்ற நிலையில் இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.
இதன்பிறகு அங்கிருந்து தனது வீட்டிற்குத் தள்ளாடியபடி வந்த சிறுமி நடந்த சம்பவத்தைத் தனது தாயிடம் கூறியிருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய நிலையில் முகமது ஆரிப், முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.