புதுச்சேரி மாநிலம் குருசுகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன். 24 வயதான இவர், செல்லப்பிராணிகளான நாய்களை வளர்த்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகன் தேவாவும், முகுந்தனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். முகுந்தன் எங்கு சென்றாலும் தனது நண்பனான தேவாவை, தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.
இத்தகைய சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, முகுந்தன் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ரம்யாவிற்கு தாய், தந்தை என யாரும் இல்லை. ரம்யாவை அவருடைய சித்தி கோமதி தான் வளர்த்து வந்தார். ஆனால், கோமதியோ கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். ஆரம்பத்தில், ரம்யாவுடன் வசித்து வந்த கோமதி தன் மகளுக்குத் திருமணம் ஆனதால் தனிமையில் வாழ வேண்டிய சூழல் உருவானது.
இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட முகுந்தன் - ரம்யா தம்பதியினர் கோமதிக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். அந்த சமயத்தில், தனது நண்பனான தேவா, அடிக்கடி முகுந்தனின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்படி அவன் வீட்டிற்கு வரும் சமயத்தில் தேவாவுக்கும் கோமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் உறவாகவும் மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.
ஒருகட்டத்தில், இந்த திருமணத்தை மீறிய உறவு விவகாரம் முகுந்தனுக்கும் ரம்யாவுக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முகுந்தன், தனது நண்பனான தேவாவை கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, இனிமேல் தன்னுடைய மாமியார் கோமதியுடன் பேசக்கூடாது எனத் திட்டித் தீர்த்துள்ளார். ஆனால், இது தேவாவுக்கு வெறுப்பை உண்டாக்கியுள்ளது. அதே நேரம், இதையெல்லாம் கண்டுகொள்ளாத தேவா, கோமதியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இத்தகைய சூழலில், கடந்த 12 ஆம் தேதியன்று முகுந்தனும் ரம்யாவும் சினிமாவிற்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட கோமதி, தேவாவை செல்போனில் தொடர்புகொண்டு வீட்டிற்கு அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. உடனே, தேவாவும் வீட்டிற்கு வர, இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதற்கிடையில், சினிமாவிற்கு சென்ற முகுந்தன் - ரம்யா தம்பதி தங்களுடைய வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த தேவா அவர்களிடம் கையும் களவுமாகச் சிக்கியுள்ளார்.
ஒருகட்டத்தில் கோபமடைந்த முகுந்தன், தேவாவிடம் தகராறு செய்துள்ளார். அந்த சமயத்தில், அங்கிருந்த ரம்யாவும் கோமதியும் பிரச்சனையைத் தடுக்க முயன்றனர். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த தேவா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகுந்தனை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும், ரத்த வெள்ளத்தில் சரிந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், முகுந்தன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய தேவாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே, அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு தேவா மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
தற்போது, மாமியாரின் திருமணத்தை மீறிய உறவைத் தட்டிக் கேட்ட மருமகன், உடன் பழகிய நண்பனால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிவாஜி