நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. நாளையோடு வேட்புமனு தாக்கல் முடிய இருக்கிறது. நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் இளைஞர்களுக்குத் திருமணம் கூட நடக்காது எனப் பேசி உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் பத்தாம் தேதியில் இருந்து ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவும் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோத உள்ளது. இந்த நிலையில், சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில் நடைபெற்ற ஹோலி விழாவில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “அரசு வேலையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதால் உத்தரப் பிரதேசத்தில் அரசுத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. இன்னும் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தால் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வயதாகிவிடும். அதனால் அவர்களுக்கு திருமணம் நடக்காத சூழல் கூட ஏற்படும்' எனக் கடுமையாக விமர்சித்தார்.