மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலில் காயங்களுடன், அரை நிர்வாணமாகக் கிடத்தப் பயிற்சி மருத்துவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
பின்பு போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் பெயர் ஆர்ஜி கர் என்றும், இவர் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி என்பது தெரியவந்தது. மேலும், இவர் கடந்த வியாழக்கிழமை(8.8.2024) இரவு நேர பணியில் இருந்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அன்று இரவு நேர பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் எனப் பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே கொல்லப்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவரது பெற்றோர் மற்றும் மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எதிர்க்கட்சிகள், உண்மையை மறைக்கச் சதி நடப்பதாகக் கூறி மாநில அரசுக்கு எதிராகக் கண்டங்களைத் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மருத்துவ மாணவி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேற்கு வங்கம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா, மாணவியின் பெற்றோரை அழைத்து ஆறுதல் கூறி கண்டிப்பாக இந்த சம்பவத்தில் ஈட்டுப்பட்ட குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து இது சம்பந்தமாக ஒருவரைக் கைது செய்த போலீஸ் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாநிலம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “மாணவி விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தூக்குத் தண்டனை வாங்கி கொடுக்க முறையிடுவோம். போராட்டம் நடத்தும் மாணவர்கள் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறினாலும், அதற்கும் நாங்கள் தடையாக இருக்க மாட்டோம். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் நிர்வாகத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். உங்களால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது” என்றார்.