இந்தியாவின் 18 வது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 19 ஆம் தேதி முதற்கட்டமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு மூன்று கட்டங்களை நிறைவு செய்துள்ளது. அடுத்தகட்டமாக நான்காம் கட்ட வாக்குப்பதிவு வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே பாஜக தலைமையிலான என்.டி.ஏ அணியும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா அணியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “காலனித்துவத்தின் அனைத்து தடையங்களும் இந்தியாவிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால் இந்த உறுதி மொழி நிறைவேற்றப்பட்டு நமது பாரம்பரியம் காக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் மோடி மீண்டும் பிரதமரானால், மோடியின் ஐந்து உறுதிமொழிகளுக்கு இணங்க உ.பி.யில் உள்ள அக்பர்பூர் நகரின் பெயர் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்திருகிறார்.
அக்பர்பூரை தொடர்ந்து, உத்தரபிரதேத்தில் உள்ள அசம்கார், அலிகார், காசியாபாத், ஃபிரோசாபாத் போன்ற பல பகுதிகளின் பெயர்களை மாற்ற யோகி தலைமையிலான அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.