உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 7,301 கோடிக்குத் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்தத் துணை பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலளித்த யோகி ஆதித்யநாத் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில இளைஞர்களை, டிஜிட்டலில் அதிகாரம் பெற்றவர்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது என கூறியுள்ள யோகி ஆதித்யநாத், இதற்காக 7 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மூவாயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த மூவாயிரம் கோடியில் ஒரு கோடி ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள் வாங்கப்பட்டு, அவை உயர்கல்வி பயிலும் மாணவர்களில் தொடங்கி அனைத்து இளைஞர்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தில் குறிப்பாக வேலையற்ற இளைஞர்கள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மாநிலத்தில் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இருப்பதைக் குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத், அவர்களுக்கான அகவிலைப்படி 11 சதவீதம் உயர்த்தப்படும் எனவும், அரசு ஊழியர்களுக்குப் போனஸ் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அதேபோல் மாநிலத்தில் உரிமையாளரின்றி 6 லட்சம் கால்நடைகள் இருப்பதாக தெரிவித்துள்ள யோகி ஆதித்யநாத், குறைந்தபட்சமாக உரிமையாளர் இல்லாத நான்கு மாடுகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு, ஒரு மாட்டிற்கு ரூ. 900 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உரிமையாளர்களற்ற 90,000 மாடுகளை விவசாயிகள் வளர்த்துவருவதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக இந்த அறிவிப்புகளை யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தரப்பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரி, தேர்தலையொட்டியே மாநில அரசு துணை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.