கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யாவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது இல்லத்திலிருந்து நேற்று மீட்கப்பட்டது. இது கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எடியூரப்பாவை தொடர்புகொண்டு சௌந்தர்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே கர்நாடக போலீஸார், சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தொடக்க கட்ட ஆதாரங்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர். இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அரக ஜனேந்திரா, சௌந்தர்யா பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தத்தால் (postpartum depression) பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் சௌந்தர்யாவும் அவரது கணவரும், பிரசவத்திற்கு பின்னர் எடியூரப்பாவின் வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும், வியாழன்றுதான் தங்கள் வீட்டிற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யா பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததை எடியூரப்பாவின் அலுவலகமும் உறுதி செய்துள்ளது. சௌந்தர்யாவிற்கு ஒன்பது மாத குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.