இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்ந்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் ஆதரவாளர்களைச் சந்தித்த பிறகு காப் தலைவர்கள் கூறுகையில், "ஜூன் 9 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பு வரும்" என்று தெரிவித்தனர்.
மேலும் விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது குறித்து பரிசீலிக்க ஜூன் 9 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் உள்ளது. பிரிஜ்பூஷன் சரண் சிங் கைது செய்யும் விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். பிரிஜ்பூஷன் சரண் சிங் கைது செய்யப்படவில்லை என்றால் ஜூன் 9ம் தேதி ஜந்தர் மந்தர் சென்று போராட்டம் நடத்துவோம். மேலும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும். மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், பிரிஜ்பூஷன் சரண் சிங் கைது செய்யப்பட வேண்டும்" என தெரிவித்தார்.