wrestlers issue BJP MP Brij Bhushan granted interim bail

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார்.

Advertisment

இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை வீரர்கள் நடத்தினார்கள். பின் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், வீரர்களுடன் கடந்த ஜூன் 8 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, 15 ஆம் தேதிக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின் வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் 18 ஆம் தேதிக்குள் பிரிஜ் பூஷண் சரண் சிங் ஆஜராக வேண்டும் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் பாஜக எம்.பி.க்கு பிரிஜ் பூஷனுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் ரூபாயைப்பிணைத் தொகையாக செலுத்தவும் பிரிஜ் பூஷன் சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.