இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவின்போது, அதனை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் பெரும் விவாதமாக மாறியது. அதனைத் தொடர்ந்து வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீச முடிவெடுத்து அங்கு சென்றனர். ஆனால், உடனடியாக விவசாயச் சங்கத் தலைவர் அங்கு சென்ற வீரர்களைச் சந்தித்து அவர்களை சமாதானம் செய்து ஐந்து நாட்கள் அவகாசம் கேட்டார்.
இந்த விவகாரங்கள் நடந்ததும், உலக மல்யுத்தக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், “பிரிஜ் பூஷண் மீதான பாலியல் குற்றச்சாட்டில், இதுவரை சரியான விசாரணை நடத்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது. விளையாட்டு அமைச்சகம் விதித்துள்ள 45 நாட்கள் கெடுவுக்குள் WFI செயற்குழு தேர்தல் நடத்தப்பட வேண்டும். தவறினால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து, வீரர்கள் 'தனி' கொடியின் கீழ் போட்டிகளில் விளையாட உலக மல்யுத்த கூட்டமைப்பு வழிவகை செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா கூறுகையில், "இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை விட இளைய மல்யுத்த வீரர்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக தேர்தலை விட குழந்தைகளின் சோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தேர்தலில் கவனம் செலுத்தினால் குழந்தைகளுக்கான சோதனைகளை நடத்துவது பாதிக்கப்படும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.