கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரது தாயார், மனைவி மற்றும் மகள் ஆகியோர் கண்முன்னே ரஞ்சித் ஸ்ரீனிவாசன் தூக்கிட்டு கொலை செய்யப்பட்டார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழாவில் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக ரஞ்சித் ஸ்ரீனிவாசன் தூக்கிட்டு கொலை செய்யப்பட்டார். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து இந்தக் கொலை வழக்கு கேரள மாவேலிக்கரை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நவாஸ், ஷெமிர், நசீர் உள்ளிட்ட 15 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவேலிக்கரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரளாவில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி ஸ்ரீதேவிக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து நீதிபதி ஸ்ரீதேவி, ஆலப்புழா மாவட்ட எஸ்.பி.க்கு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், நீதிபதி ஸ்ரீதேவிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.