Skip to main content

உயிரை பறித்த மாந்திரீக பூஜை; நிர்வாண சித்ரவதை செய்த சாமியார் கைது

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

nn



இந்த விஞ்ஞான யுகத்திலும் நரபலி கொடுப்பது, புதையல் எடுப்பது, மாந்திரீகம் செய்வது எனக் கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட அதிர்ச்சி தரும் சில சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறத் தான் செய்கிறது. அந்த வகையில் நோய்வாய்ப்பட்ட ஒருவரை முறையாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் மாந்திரீகம் செய்வதாகக் கூறிய நபரிடம் அழைத்துச் சென்று இறுதியில் நோய் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

 

தெலுங்கானாவின் மஞ்சிரியாலா மாவட்டத்தில் சென்னூர் பகுதியில் வசித்து வந்தவர் தாசரி மது. இவர் பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். ஆனால் இவரது குடும்பத்தினர் அவருடைய நோய்க்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மாந்திரீகம் செய்வதாக கூறிய போலி சாமியார் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். தாசரி மதுவின் உடலில் தீய சக்தி இருப்பதாக தெரிவித்த அந்த போலி சாமியார் அதை முதலில் அவரது உடலில் இருந்து விரட்டினால் தான் அவர் பழையபடி வர முடியும் எனக் கூறியுள்ளார்.

 

bb

 

அவரின் அத்தனை பேச்சுகளையும் நம்பிய குடும்பத்தினர் மாந்திரீக பூஜைக்கு தாங்கள் உடன்படுவதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கோதாவரி ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லப்பட்ட தாசரி மதுவின் உடலில் இருந்த ஆடைகளை களைத்த சாமியார் நோய்வாய்ப்பட்ட அவரை நிர்வாணமாக உட்காரவைத்து பூஜை என்ற பெயரில் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். ஆனால் அங்கு நடந்த சித்ரவதைகளை தாங்க முடியாமல் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இறுதியில் மாந்திரீக பூஜை செய்யப்பட்ட இடத்திலேயே தாசரி மது உயிரிழந்தார்.

 

இந்த உயிரிழப்பு சம்பவத்தை வெளியே கசிய விடக்கூடாது என்பதற்காக அங்கேயே ஈமச்சடங்கு செய்யும் காரியங்களில் போலி சாமியார் இறங்கினார். தாசரி மதுவின் குடும்பத்தாரையும் எப்படியோ பேசி சமாளித்த சாமியார் உடலுக்கு தீ வைத்து எரிக்க ஏற்பாடுகளை செய்தார். ஆனால் தாசரி மதுவின் குடும்பத்தாருடன் அங்கு சென்றிருந்த உறவினரான ஒருவர் ஆரம்பத்தில் இருந்தே செல்போனில் இந்த பூஜை வீடியோ காட்சிகளை ரகசியமாக பதிவு செய்து வைத்திருந்தார். அதனை போலீசாருக்கு அனுப்பியதையடுத்து சம்பவத்திற்கு வந்த போலீசார் சாமியாரை கைது செய்தனர். தாசரி மதுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மூடநம்பிக்கையால் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் அதிரடி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Telangana DGP suspended; The Election Commission is in action

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 63 இடங்களையும், பிஆர்எஸ் 40 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், பிற கட்சியினர் 8 இடங்களையும் பிடித்துள்ளனர்.

 

இந்த சூழலில் தெலங்கானா மாநில போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமார், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்கு முன்பாகவே தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டியை சந்தித்தாகக் கூறி தெலங்கானா போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமாரை சஸ்பெண்ட் செய்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்