வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் ஆகியவற்றை நடத்திய விவசாயிகள், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை வீட்டிற்கு திரும்பப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
இந்தநிலையில் மேகாலயா மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், மத்திய அரசு விவசாயிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சத்ய பால் மாலிக் கூறியதாவது:
“ஒரு நாய் இறந்தாலும் அதற்கு இரங்கல் அனுசரிக்கப்படுகிறது. 250 விவசாயிகள் இறந்துள்ளனர், ஆனால் யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. விவசாயிகளின் போராட்டம் இவ்வாறு நீண்டகாலமாக தொடர்ந்தால், மேற்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் பாஜக வலுவிழக்கும். போராட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் பேசினேன். விவசாயிகளை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பக்கூடாது. அரசாங்கம் அவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும்.
நான் அவர்களுக்கு ஊறு விளைவிப்பதாக அரசாங்கம் நினைத்தால் நான் ஆளுநர் பதவியிலிருந்து ஒதுங்கிவிடுவேன். நான் ஆளுநராக இல்லாவிட்டாலும் விவசாயிகளுக்காகப் பேசுவேன். விவசாயிகளின் நிலையை என்னால் தாங்க முடியவில்லை. மக்கள் எம்.எல்.ஏ.க்களை தாக்குவதால், பாஜக தலைவர்களால் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியேற முடியவில்லை. உடன்பாட்டை விரும்பாதவர்கள் அரசுக்கு ஊறு விளைவிப்பவர்கள். எனது வார்த்தைகள் கட்சிக்கு தீங்கு விளைவிக்காது. மாறாக விவசாயிகள், யாராவது ஒருவராவது தங்களுக்காகப் பேசுகிறார்கள் என நினைப்பார்கள்.”
இவ்வாறு மேகாலயா ஆளுநர் தெரிவித்தார்.