Skip to main content

பாடாய்ப்படுத்தும் படையப்பா.. பதட்டத்தில் மூணாறு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

Wild Elephant Padayappa in Munnar

 

கேரளாவின் மூணாறு பகுதியிலுள்ள மாட்டுப் பெட்டி அணைப் பகுதியின் சாலையோர கடைகளை, வனப் பகுதியிலிருந்து வந்த ஆண் யானை ஒன்று சூறையாடியது.

 

கேரளாவின் மூணாறு இடுக்கி பகுதிகள் சுற்றுலாத்தலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகமிருக்கும். அதன் காரணமாகவே சாலையோரம் பழக்கடைகள், இளநீர் விற்பனை கடைகள் பரவலாகவே காணப்படும். மூணாறு பகுதியின் பிரம்மாண்டமான காட்டுயானை ஒன்று அடிக்கடி ஊருக்குள் வந்து அட்டகாசம் பண்ணிவிட்டுச் செல்வது வழக்கம். பார்ப்பதற்கு அம்சமாகத் திகழும் அந்த யானையை அப்பகுதி மக்கள் படையப்பா என்று பாசத்தோடு அழைப்பர்.

 

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மூணாறின் எக்கோ பாயிண்ட் பகுதியில் காட்டிலிருந்து வெளியே வந்த படையப்பா, சாலையோரங்களிலிருந்த கடைகளைப் பதம் பார்த்தது அங்கே கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அன்னாசி பழம், கேரட், சோளம் உள்ளிட்ட பொருட்களைத் தின்ற பின்பு நேற்று காலை 7 மணிக்கு தான் காட்டுக்குள் சென்றது. சுற்றுலாவுக்காக வந்த பயணிகள் இதைப் பார்த்து ரசித்தாலும் மற்றொருபுறம் அவர்களுக்கு அச்சம்.

 

பின்னர் மீண்டும் அதே பாயிண்ட்டிற்கு வந்த படையப்பா, சாலை பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இளநீர் காய்களை தரையில் மிதித்து உடைத்து சாப்பிடுகிற வீடியா கேரளாவின் சமூக வலை தளங்களில் வைரலோ வைரல். இந்தச் சூழலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வேறு அடை போன்று மொய்க்க, வனத்துறையினரோ படையப்பா யானையை காட்டுக்குள் திருப்பிய அனுப்ப இரண்டு மணி நேரம் போராட வேண்டியதாயிற்று.

 

மீண்டும் படையப்பாவின் அதிரடி ஆட்டம் எப்போது. திக் திக் மனப் பதட்டத்திலிருக்கிறது மூணாறு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு தேடி வந்த வாக்கு இயந்திரம்; வாக்களித்த 111 வயது மூதாட்டி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார். 

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.