கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, இந்தியாவில் ரயில் சேவை பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்தநிலையில் குறைந்த தூரம் இயங்கும் பயணிகள் ரயில்களின் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால், பயணிகள் அதிர்ச்சியடைந்ததுடன், தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் குறைந்த தூர பயணிகள் இரயில்களின் கட்டண உயர்வு குறித்து, இரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கட்டண உயர்வு குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதிலிருந்து மக்களைத் தடுக்கும் பொருட்டு, குறைந்த தூர ரயில்களில் சற்று அதிகமான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் இன்னும் இருக்கிறது. இந்த சற்று அதிக கட்டணமானது, ரயில்களில் கூட்டம் வருவதைத் தடுக்கவும், கரோனா பரவுவதைத் தடுக்கவும் ரயில்வேயால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
தேவையற்ற பயணங்களைத் தடுப்பதற்காக, ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது, ரயில் பயணிகளுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.