முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் 08/12/2021 பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு. இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நேற்று அவர் பெங்களூரில் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பிபின் ராவத் மறைந்த நிலையில் இந்தியாவின் முப்படை தளபதி பதவியை அடுத்ததாக நிரப்பப்போவது யார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் முப்படை தளபதி என்ற பதவியே இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. எனவே முப்படை தளபதி பொறுப்பு என்பது இந்தியாவிற்கு புதியதே. புதியதாக கொண்டுவரப்பட்ட முப்படை தளபதி பதவியில் முதன்முதலாக அமர்த்தப்பட்டவரும் பிபின் ராவத்தான். இந்திய பாதுகாப்பு படைகளில் (விமானப்படை, கடற்படை, ராணுவம்) தளபதி பொறுப்பு வகிக்கும் ஒருவர் பணி ஓய்வு பெற்றுவிட்டால் அவருக்கு அடுத்த ரேங்கில் உள்ளவர் தளபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதும் வழக்கம். ஆனால் மூன்றையும் ஒன்று சேர்க்கும் முப்படை தளபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பான எந்த விதிமுறைகளும், வரையறைகளும் இல்லை. ஆனால் விமானப்படை, கடற்படை, ராணுவம் ஆகிய படைகளில் ஏதேனும் ஒரு படைப்பிரிவின் தளபதியே முப்படை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.
ஜெனரல் எம்.எம். நரவானே-ராணுவப்படை, ஏர் சீஃப் மார்ஷல் விவேக்ராம் சவுத்ரி-விமானப்படை, அட்மிரல் ஹரிகுமார்-கடற்படை என தற்பொழுதுள்ள பாதுகாப்பு படை தளபதிகளில் ஒருவரே தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இவர்களில் மூத்த அனுபவம் கொண்டவர் ராணுவ தளபதியான ஜெனரல் எம்.எம். நரவானே ஆவார். விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக்ராம் சவுத்ரி கடந்த செப்டம்பர் மாதமும், கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கடந்த நவம்பர் மாதமும்தான் தளபதிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ராணுவப்படை தளபதியான ஜெனரல் எம்.எம்.நரவானே 2019 ஆம் ஆண்டுமுதல் அப்பதவியில் உள்ளார். இன்னும் நான்கு மாதங்களில் ஜெனரல் எம்.எம். நரவானே ஓய்வுபெறவும் இருக்கிறார். அதிக அனுபவம் கொண்டவர் என்ற அடிப்படையில் ஜெனரல் எம்.எம். நரவானேவே முப்படை தளபதியாக நியமிக்கபட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புதிய முப்படை தளபதி யார் என அறிவிக்கப்படும் வரை பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் அவர் விட்டுச்சென்ற பொறுப்புகளை மேற்கொள்வார் எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.