புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், பாஜக 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல், காங்கிரஸ் - திமுக கூட்டணி 8 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. மேலும், 6 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, ஐந்திலும் தோல்வி அடைந்துள்ளது.
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி கைப்பற்றிய நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமியின் இல்லத்தில் இன்று (03/05/2021) பாஜகவின் மேலிட பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா மற்றும் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜகவின் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, "தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, முதல்வர் யார் என்பதை முடிவு செய்வார்கள். புதுச்சேரி அமைச்சரவையில் பாஜக இடம்பெறுவது உறுதி" எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பே தாம்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் தெளிவுப்படுத்திய சூழலில், முதல்வர் பதவியைப் பெற பாஜக முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது