Skip to main content

‘மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?’ - வெளியான தகவல்!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
What was the decision taken in the central cabinet meeting

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், குமாரசாமி, பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மாஞ்சி, ராஜிவ் ரஞ்சன் சிங், சர்பானந்த சோனாவால், விரேந்திர குமார், ராம் மோகன் நாயுடு, பிரகலாத் ஜோஷி, ஜூவல் ஓரம், கிரிராஜ் சிங், அஸ்வினி வைஷ்னவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பூபேந்தர் யாதவ், கஜேந்திரசிங் செகாவத், அன்னபூர்ணா தேவி, கிரண் ரிஜிஜூ, ஹர்திப்சிங் புரி, கிஷன் ரெட்டி, சிராக் பாஸ்வான், மன்சுக் மாண்டவியா மற்றும் சி.ஆர்.பர்டில் ஆகியோருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

What was the decision taken in the central cabinet meeting

இதனையடுத்து தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். இத்தகைய சூழலில்தான் பிரதமர் மோடி தலைமையில் புதியதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ளது பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான தேதி, 100 நாட்கள் செயல் திட்டம், மக்களவை சபாநாயகர் தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்தியாவில் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

What was the decision taken in the central cabinet meeting

மத்திய அரசு 2015-16 முதல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி, தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளைக் கட்டுவதற்கு உதவி செய்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதன்படி கட்டப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மற்ற அடிப்படை வசதிகளான வீட்டுக் கழிப்பறைகள், சமையல் எரிவாயு (எல்பிஜி) இணைப்பு, மின்சார இணைப்பு, வீட்டுக் குழாய் இணைப்பு போன்றவற்றை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பிற திட்டங்களுடன் இணைப்பதன் மூலம் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மூத்த கேபினட் அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

சார்ந்த செய்திகள்