இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 12 மற்றும் 13ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர். அதேசமயம், உ.பி. மாநிலம் அயோத்தியில் சுமார் 24 இலட்சம் அகல் விளக்கை ஒரே சமயத்தில் ஒளிரவிட்டு, கின்னஸ் சாதனை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அங்கு ஏழ்மை நிலையில் இருக்கும் சிறுவர்கள் அந்த விளக்கில் இருந்து எண்ணெய்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது உ.பி. மட்டுமின்றி இதே ஏழ்மை நிலையில் நாடு முழுக்க பலர் தங்கள் தீபாவளியைக் கழித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, பண்டிகை அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போதும் நமது மக்கள் கூகுளை நாடுவது மரபாகவே மாறிவிட்டது. இந்நிலையில், இந்த தீபாவளிக்கு மக்கள் அதிகளவில் கூகுளில் என்ன தேடினர் என்பதை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை வெளியிட்டுள்ளார்.
கூகுளில் அதிகம் தேடப்பட்டத்தில் முதல் 5 இடத்தைப் பிடித்த தேடலை அவர் வெளியிட்டுள்ளார். அதிலும், ஏன் எனும் கேள்வியுடன் தேடப்பட்டதை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, கூகுளில் இந்த தீபாவளிக்கு மக்களால் அதிகம் தேடப்பட்டவை;
1. இந்தியர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்?
2. தீபாவளிக்கு ஏன் ரங்கோலி வரைகிறோம்?
3. தீபாவளி அன்று ஏன் விளக்கு ஏற்றுகிறோம்?
4. தீபாவளி அன்று ஏன் இலட்சுமி பூஜை செய்கிறோம்?
5. தீபாவளி அன்று ஏன் எண்ணெய் குளியில் எடுக்கிறோம்?
எனும் ஐந்து விஷயங்களை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர்.