மேற்கு வங்கத்தில் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் இன்று (17.06.2024) காலை 9 மணியளவில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுள்ளது. அப்போது அங்கு வந்த சரக்கு ரயில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் முழுவதுமாக சீர்குலைந்துள்ளன.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஃபன்சிடேவா பகுதியில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்காக டிஎம், எஸ்பி, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.