மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டது.
மேலும் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ரிஷிரா மற்றும் செராம்பூர் ஆகிய பகுதிகளில் ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதல்களைப் பார்வையிட மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் மற்றும் பாஜக எம்.பி ஜோதிர்மயி சிங் மஹாட்டோ ஆகியோர் சென்றனர். ஆனால் தடை உத்தரவை காரணம் காட்டி அவர்களை அங்கிருந்த போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இது குறித்துப் பேசுகையில், "ராம நவமி ஊர்வலங்கள் ஏன் ஐந்து நாட்கள் நடக்கிறது. ராம நவமி கொண்டாட்டத்தின் போது நீங்கள் பல பேரணிகளை நடத்தலாம். ஆனால் பேரணியில் உங்களுடன் ஆயுதங்களை எடுத்து செல்ல வேண்டாம். பாஜகவினர் வேண்டுமென்றே அனுமதியின்றி ஊர்வலங்கள் என்ற பெயரில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிக்கு செல்கின்றனர். ரிஷிராவில் ஆயுதங்களுடன் பாஜகவினர் பேரணி நடத்தினார்கள்" என்று பேசினார்.