மேற்கு வங்கத்தில் மாபெரும் வெற்றியுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட திரிணாமூல் காங்கிரஸ், அடுத்ததாக 2023ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கவிருக்கும் திரிபுரா மாநிலத்தைக் குறிவைத்து காய்களை நகர்த்திவருகிறது.
முதலில் திரிபுரா பாஜக எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க திரிணாமூல் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. அதன்பிறகு அண்மையில் முன்னாள் அமைச்சர் பிரகாஷ் சந்திர தாஸ், முன்னாள் எம்எல்ஏ சுபால் பவ்மிக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) உறுப்பினர் பன்னா தேப் உள்ளிட்ட ஏழு காங்கிரஸ் தலைவர்களை திரிபுரா திரிணாமூல் காங்கிரஸ் தனது கட்சியில் இணைத்தது. அதன் தொடர்ச்சியாக திரிபுராவில் ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்த 'பஞ்ச பாண்டவர்' என்ற குழுவை மம்தா அமைத்துள்ளார்.
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, "திரிபுராவின் முன்னாள் சபாநாயகர், அவருடன் பலர் திரிணாமூல் காங்கிரஸில் இணைய விரும்புவதாக எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். அடுத்ததாக நாங்கள் திரிபுராவை வெல்வோம். வங்கத்தின் திட்டங்களை திரிபுராவில் செயல்படுத்த விரும்புகிறோம்" எனக் கூறியுள்ளார்.
மேலும் மம்தா, டார்ஜிலிங், தெராய் மற்றும் கலிம்பாங் பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யுமாறு எனது தலைமைச் செயலாளர், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்" எனவும் கூறியுள்ளார்.