இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. இன்று கூடும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூரில் வன்முறை, பொது சிவில் சட்டம், ஆளுநர்கள் செயல்பாடுகள், அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள், விலைவாசி உயர்வு, டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி உள்ளன. எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் மழைக்காலக் கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசரச் சட்டம், டிஜிட்டல் தனிநபர் தகவல் மசோதா, வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா உள்ளிட்ட 31 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 7 மசோதாக்கள் விவாதத்திற்கு கொண்டு வர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சிறந்த சட்டங்களை உருவாக்க விவாதங்கள் அவசியமான ஒன்று. எனவே ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளது. இன்று தொடங்கும் கூட்டத்தொடரில் மக்களுக்குப் பயனுள்ள பல மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன. எனவே இந்த மசோதாக்கள் நிறைவேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புத் தர வேண்டும். மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் பெரும் வேதனையைக் கொடுத்துள்ளது. இதனால் எனது இதயம் கனத்துள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். அனைத்து மாநில முதல்வர்களும் பெண்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தப்பிக்க விட மாட்டோம்” எனத் தெரிவித்தார். முன்னதாக மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் 3ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் மூண்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அசம்பாவித சம்பவங்களும், பல கொடுமையான வன்முறைகளையும் மணிப்பூர் மாநிலம் சந்தித்துவருகிறது. எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 4ம் தேதி மணிப்பூரில் நடந்த கொடூரமான சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி நாட்டையே பெரும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 20ம் தேதி) நாடாளுமன்றக் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி இது குறித்து பேசியுள்ளார். 78 நாட்கள் கழித்து பிரதமர் மணிப்பூர் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.