உலகின் பல்வேறு நாடுகளில் 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்தநிலையில் இந்தியாவில், 18 வயதுக்கும் குறைவானவர்கள் மீது கரோனா தடுப்பூசி சோதனை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, குழந்தைகளுக்கான தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரலாம் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "குழந்தைகள் மீதான தடுப்பூசி சோதனை நடந்துவருகிறது. குழந்தைகள் மீதான கோவாக்சின் தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதன் தரவுகள் செப்டம்பரில் வெளியாகும். ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் தடுப்பூசி சோதனையும் குழந்தைகள் மீது (12+) நடத்தப்பட்டது. அதன் தரவுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களிலோ அல்லது செப்டம்பரிலோ குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்குத் தடுப்பூசி பூஸ்டர்கள் (மூன்றாவது டோஸ்) தேவைப்படலாம் என்றும் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "காலப்போக்கில் நோய்எதிர்ப்பு சக்தி குறையுமென்பதால், நமக்குப் பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம். உருவாகிவரும் மரபணு மாற்றமடைந்த கரோனாக்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் வகையில் பூஸ்டர் டோஸ் வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். பூஸ்டர் டோஸ்கள் ஏற்கனவே சோதனையில் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவருக்கும் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகே, பூஸ்டர் ஷாட்கள் செலுத்தப்படும் என ரந்தீப் குலேரியா கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.