வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என்றும், அரசு அவர்களுக்கு துணை நிற்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஹோம் பேரரசின் தளபதி லச்சித் பர்புகனின் 400 ஆவது பிறந்த நாள் விழா டெல்லியில் கொண்டாடப்படுகிறது. மூன்று நாள் நிகழ்வான இவ்விழாவில் இரண்டாம் நாளான நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர், "நான் ஒரு வரலாற்று மாணவன். நமது வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக நான் பலமுறை கேள்விப்பட்டுள்ளேன். அது சரியாகக் கூட இருக்கலாம். நாம் அதை சரி செய்ய வேண்டும். நமது வரலாற்றை திருத்தி; பெருமையுடன் எழுதுவதை யாரால் தடுக்க முடியும்? சுதந்திரப் போராட்டத்தில், தாய்நாட்டிற்காக போராடியவர்களின் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். வரலாற்றை திருத்தி எழுதினால் பொய் தானாகவே மறைந்துவிடும்.
இங்கிருக்கும் மாணவர்களையும் பேராசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இதில் இருந்து மீண்டு வாருங்கள். ஆராய்ச்சி செய்து வரலாற்றை மறுபடியும் எழுதுங்கள். வருங்கால சந்ததிகளை இப்படித்தான் ஊக்குவிக்க முடியும்” எனக் கூறினார்.