Skip to main content

“தமிழகத்திற்கு கூடுதலாகவே நீரை திறந்து விட்டுள்ளோம்” - கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

We have opened water in addition to Tamil Nadu Deputy Chief Minister of Karnataka T.K.Sivakumar

 

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது கடினம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் வழக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் எதிராக தமிழக அரசு சார்பில் நேற்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “மழைப்பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்து விடக் கோரியும், 8.988 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருக்க வேண்டிய நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தவறிவிட்டது என 6 முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை கொண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

 

இருப்பினும் காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை மேற்கொள்ளாததால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் காவிர் நதி நீர் விவகாரம் குறித்து விசாரணை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. அப்போது நீதிபதிகள் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஏற்கனவே நாங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறோம் என தெரிவித்தனர். மேலும் காவிரி நதிநீர் தொடர்பான வழக்கை புதன்கிழமை (06.09.2023) விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி காவாய் அமர்வு அறிவித்துள்ளது.

 

We have opened water in addition to Tamil Nadu Deputy Chief Minister of Karnataka T.K.Sivakumar

 

இந்நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர் பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறப்பது குறித்து கருத்து தெரிவிக்கையில், “அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக காவிரி நீரை தமிழகம் பயன்படுத்தியிருக்கிறது. தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடுவு செய்யப்பட்டிருக்கிறது. மேலாண்மை வாரியம் கூறியதை விட தமிழகத்திற்கு கூடுதலாகவே நீரை திறந்து விட்டுள்ளோம். நிர்ணயித்த அளவை விட கூடுதலாக நீரைத் திறந்து விட்டதாக தமிழகத்திடம் நாங்கள் கூறிவிட்டோம். கர்நாடக மாநில அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்பது தமிழகத்திற்கு தெரியும். மேலும் நீர் பற்றாக்குறையால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீருக்காக நாஙகள் தண்ணீரை சேமிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்போது பயிரிடுவதை தமிழகம் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்