Skip to main content

''மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளோம்... மக்கள் நினைத்தால் முறியடிக்கலாம்...'' - பிரதமர் மோடி உரை!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

'' We are affected again ... modi speech

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்களுடன் அடுத்தடுத்த ஆலோசனையில் பிரதமர் மோடி ஈடுபட்டிருந்த நிலையில், தற்பொழுது காணொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது, ''கரோனா  இரண்டாவது அலையாக உருவெடுத்து வந்திருக்கிறது.  கரோனா இரண்டாவது அலையால் மீண்டும் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். கரோனாவால் நாம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறோம். கரோனாவின் இப்போதைய பாதிப்பிலிருந்து நம்மால் மீண்டு வர முடியும். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன். கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கேற்கிறேன்.

 

இந்தச் சூழலில் நாம் அனைவரும் முன்களப் பணியாளர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். மக்களின் வலியை நான் புரிந்து கொள்கிறேன். அவர்கள் கஷ்டத்தில் பங்கெடுக்கிறேன். தங்கள் உயிரைப் பணயம் வைத்து முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாடுபடுகின்றனர். நம்முடைய பொறுமையை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் தைரியத்துடன் போராட வேண்டும்.

 

மத்திய, மாநில அரசுகள் இணைவதோடு மட்டுமல்லாமல் மக்களும் இணைந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும். மருத்துவ நிறுவனங்களுடன் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து பேசி வருகிறேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட மருந்து உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நாம் பூர்த்தி செய்வோம். நாட்டில் மருந்து நிறுவனங்கள் உள்ளன. எனவே கவலை தேவையில்லை. இதுவரை 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைந்த விலையில் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படுகிறது.

 

18 வயதுக்கு மேற்பட்டோரும் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது உள்ள இடங்களிலேயே நீடிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம் முதல் வெண்டிலேட்டர் வரை பெரிய அளவில் மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்துள்ளோம். நாம் கட்டுப்படுவதன் மூலமே கரோனா பரவாமல் கட்டுப்படுத்த முடியும். வெளியே செல்லாமல் முடிந்தவரை வீட்டிலேயே இருந்து பணியாற்ற முன்வரவேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை அதிகரிப்பதன் மூலம் நாடு முழுவதும் முழு முடக்கத்தைத் தடுக்கலாம். பொதுமுடக்கம் என்பதைக் கடைசி ஆயுதமாகவே மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும்” - மம்தா கடும் தாக்கு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Mamata says PM Modi should look at himself in the mirror

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “ஊழல் புகார்களை விசாரிக்க பா.ஜ.க அரசு, 300 மத்தியக் குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, ​​பிரதமர் மோடி வங்காள மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்கு வங்காளத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர் முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையர்களால் நிரம்பியுள்ளது. பா.ஜ.க, மேற்கு வங்காளத்துக்கு எதிரான கட்சி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வங்காளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் மாநில நலனுக்காகத் தனித்து நிற்கிறோம். நாட்டைக் காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.