கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட வீரர்கள் 10வது நாளாக இன்றும் (08.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தது இந்தியாவையே உலுக்கியுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 413ஆக உயர்ந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1968 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு 16 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் மறுவாழ்வுக்காக வாடகை வீடுகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை 6 மண்டலங்களாக பிரித்து தேடுதல் பணியில் மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதோடு மோப்ப நாய்களும் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் நேற்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சன்ரைஸ் பள்ளத்தாக்கில் இன்று மேலதிக சோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நாளை மறுநாள் (10.08.2024) பிரதமர் மோடி வயநாடு மலைப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையம் வந்தடைகிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்றடைகிறார். இந்த பயணத்தின் போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்.