சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது தொடங்கி உள்ளன.
அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையம் 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்திருந்தது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதேபோல் மிசோரம் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் தொடங்கியுள்ளது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 223 பேர் வேட்பாளராக களத்தில் உள்ளனர். 20 தொகுதிகளில் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 5,304 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மிஞ்சியுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் சுமார் 60,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு நிபுணர்களும் அனைத்து இடங்களிலும் ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் மிசோரத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 40 தொகுதிகளிலும் சுமார் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 170 வேட்பாளர்கள் மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் களத்தில் உள்ளனர்.