Skip to main content

“பிரதமருக்கு அவ்வளவு அறிவு இருந்தால் அவரே அதை செய்ய வேண்டும்” - வி.கே.பாண்டியன் தாக்கு

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
VK Pandian criticizes pm modi in odisha

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மொத்தம் 21 தொகுதிகள் கொண்ட ஒடிசா மாநிலத்தில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், ஒடிசாவில் நேற்று முன்தினம் (20-05-24) பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசிய போது, “ஒடிசாவில் ஒரு மாஃபியா எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், யாரையும் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஜூன் 10ஆம் தேதி பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், அதன் முதுகெலும்பு உடைந்து விடும். நமது வீடுகளின் சாவிகள் தொலைந்து போனால், ஜெகநாதரைப் பிரார்த்தனை செய்து, இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஓரிரு மணி நேரத்தில் அவற்றைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால் பகவான் ஜகன்னாத ரத்ன பண்டரின் சாவிகள் காணாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. ரத்ன பண்டரின் சாவி காணாமல் போனது தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கை, சாவிகள் தமிழகத்திற்கு சென்று விட்டதால், ஆறு ஆண்டுகளாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

விசாரணை அறிக்கை என்ன ஆனது என்பதை ஒடிசா முழுவதும் அறிய விரும்புகிறது. பி.ஜே.டியின் மௌனம் மீது சந்தேகம் வலுக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததும், முழு உண்மையும் வெளிவரும் என்றும், அறிக்கையை வெளியிடுவோம் என்றும் மக்களுக்கு உறுதியளிக்கிறேன். ஜெகந்நாதருக்கு நாம் செய்யும் சேவை இந்தப் பணியிலிருந்து தொடங்கும். நீங்கள் பி.ஜே.டிக்கு 25 ஆண்டுகள் கொடுத்தீர்கள். அதன் முடிவுகள் உங்களுக்குத் தெரியும். ஜூன் 10ஆம் தேதி ஒடிசாவில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் பதவியேற்கவுள்ளது. இந்த அரசு செல்ல வேண்டும். பி.ஜே.டி வழிவகுத்தது, இப்போது அவர் செல்ல வேண்டிய நேரம் இது” என்று கூறி கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். 

பூரி ஜெகன்நாதரின் சாவி தமிழகத்திற்கு சென்றுவிட்டதாக கூறிய பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தை ஆட்சி செய்யும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வி.கே.பாண்டியன் கூறுகையில், “பிரதமருக்கு அவ்வளவு அறிவு இருந்தால் சாவி எங்கே போனது என்று கண்டுபிடித்து தர வேண்டும். பிரதமரிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு கீழ் பல அதிகாரிகள் உள்ளனர், அவருக்கு ஓரளவு அறிவு இருக்கும். அவர்கள் ஒடிசா மக்களை அறிவூட்ட முடியும். எனவே சாவிகள் எங்கே என்று அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம்; பிரதமருக்கு மம்தா பரபரப்பு கடிதம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Mamata letter to Prime Minister for new criminal laws

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியச் சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை ‘பாரதிய நியாய சன்ஹிதா சட்டம்’ எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை ‘பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா’ எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை ‘பாரதிய சாக்சியா’ எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். 

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா மீண்டும் தாக்கல் செய்தார். மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 புதிய குற்றவியல் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ‘உங்களது அரசாங்கம் இந்த மூன்று முக்கியமான மசோதாக்களை ஒருதலைபட்சமாகவும், எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றியது. அன்று, கிட்டத்தட்ட 100 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இரு அவைகளின் மொத்தம் 146 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜனநாயகத்தின் அந்த இருண்ட நேரத்தில் எதேச்சதிகாரமான முறையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் தேதியை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அணுகுமுறை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்மொழியப்பட்டதை முழுமையாக ஆராய வாய்ப்பளிக்கும். மேலும், குற்றவியல் சட்டங்களை மீண்டும் நாடாளுமனறத்தில் மறு ஆய்வு செய்ய உதவும். எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Next Story

பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு; பரபரப்பு சம்பவம்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Shoes thrown at PM Modi's car in varanasi

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா 234 இடங்களை கைபற்றியது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.கவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாத காங்கிரஸ், இந்தத் தேர்தலில் தனித்து 99 இடங்களைக் கைபற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. 

பிரதமராக பதவியேற்ற மோடி, முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு நேற்று (18-06-24) சென்றார். அங்கு நடைபெற்ற ‘பிஎம் கிசான் சமேலன்’ என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்தார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இவ்வாறு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி காரில் வருவதைக் கண்ட பொதுமக்களும், பா.ஜ.க தொண்டர்களும் சாலையோரம் நின்று கையசைத்து வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், காரில் பயணம் செய்த போது பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு ஒன்று விழுகிறது. இதைக் கவனித்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர், காரில் இருந்த செருப்பை எடுத்து தூக்கி எறிகிறார். தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.