நாட்டின் 77வது சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அறிவித்தார். அந்த உரையில் பேசிய மோடி, “இந்தியா முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி, திறம் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற உதவிகளை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். பிரதமர் மோடி அறிவித்த இந்த திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. குறிப்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திராவிடர் கழகம் சார்பில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக துணை செயலாளர் ஆ.ராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், “இது சாதிய கட்டமைப்பை நிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. திறன் மேம்பாட்டு பயிற்சி என்பது வேறு. ஆனால், இந்த திட்டத்தில் தொழிலில் திறன் பெற்றவர்களை குலத்தொழிலாளியாக்க என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை பா.ஜ.க வினர் நிறைவேற்றுகின்றனர்” என்று பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “சனாதனமும், விஸ்வகர்மா யோஜனா திட்டமும் வேறல்ல. தொழிலை வளர்ப்பது சமூகத்துக்கு தேவை. ஆனால், அது குலத்தொழிலோடு சேர்த்து சாதியாக பிரிக்கப்படுகிறது. இவர் மகன் இந்த தொழில் தான் பார்க்க வேண்டும் என்னும் குலத்தொழிலை ஒழிக்கும் கட்டாய கடமை நமக்கு இருக்கிறது” என்று கூறினார்.
இந்த நிலையில், டெல்லியின் துவாரகாவில் யசோ பூமி என பெயரிடப்பட்டுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி திறந்து வைத்தார். துவாரகா பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோடி, “விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வங்கி உத்தரவாதம் ஏதுமின்றி ரூ.3 லட்சம் வரை மத்திய அரசு கடன் வழங்கும். இதற்கான வட்டியும் மிகவும் குறைவு. முதலில் ரூ.1 லட்சம் கடனாக வழங்கப்படும், அந்த தொகையை திருப்பி செலுத்தியதும் மீதமுள்ள ரூ.2 லட்சம் ரூபாய் கடனாக அளிக்கப்படும்” என்று கூறினார். இந்த திட்டம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்த திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் அதற்கான இணைய சேவையில் முன்பதிவு செய்ய வேண்டும். இதன்படி அடையாள அட்டை, விஸ்வகர்மா சான்றிதழ் வழங்கப்படும்’ என்று கூறியிருந்தது.
இந்த திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்தவண்ணம் இருக்கிறது. அந்த வகையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது, தொழில்முனைவோரை வளர்ப்பதும் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார். அதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “பிரதமரின் ஒவ்வொரு திட்டங்களும் இதுவரை சென்றடையாதவர்களைச் சென்றடைவதை நோக்கமாக கொண்டவை. இந்த திட்டத்தின் மூலம், கைவினை கலைஞர்களுக்கு சில உதவிகளை வழங்க முடியும். அவர்களின் பங்களிப்பிலிருந்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்” என்று கூறினார்.
இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்து இது குறித்து பேசினார். அதில் அவர், “ அப்போது இருந்த காங்கிரஸ் முதல்வர் ராஜாஜி, அரை நாள் பள்ளி, பின்னர் தந்தை செய்யும் தொழிலில் பயிற்சி என்று திட்டத்தை கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த அந்த திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. இன்னும் கூற வேண்டுமென்றால் காமராஜரே அந்த திட்டத்தை எதிர்த்தார். ராஜாஜி கொண்டு வந்த அவரது கல்வி திட்டத்திற்கு எந்தவிதமான பெயரும் சூட்டவில்லை. ஆனால், நாங்கள் தான் அதனை குலக்கல்வித் திட்டம் என குறிப்பிட்டோம்.
ராஜாஜி கொண்டு வந்த அதே திட்டத்தை தான் இப்போது பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். இளைஞர்கள் 18 வயதை கடந்த பின்பு சுய தொழில் செய்ய வங்கி கடன் திட்டம் என்பது அந்த சமூக இளைஞர்களின் கல்லூரி மற்றும் உயர் கல்வி திட்டத்தை தடுக்கும். மேலும், குலக்கல்வி முறையே இளைஞர்களை உயர்கல்வி படிக்கவிடாமல் தடுப்பதற்கான சதிச்செயல் திட்டம். இது மோசமான நடவடிக்கை. மோடி அறிவித்துள்ள இந்தத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்” என்று கூறினார்.