Skip to main content

மத்திய அமைச்சரின் தலையை கொண்டுவந்தால் 51 லட்சம் -  விஷ்வ இந்து சேனா தலைவர் அறிவிப்பால் சர்ச்சை!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

vishwa hind sena leader

 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெறும் ஆசிர்வாத் யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, சுதந்திர தின விழா உரையின்போது மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தை மறந்துவிட்டதாகவும், தான் அப்போது அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என தெரிவித்தார்.

 

இதற்கு சிவசேனா தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சிவசேனா உறுப்பினர்கள் அளித்த புகாரின்பேரில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

இந்தநிலையில் விஷ்வ இந்து சேனா தலைவர் அருண் பதக் தனது ட்விட்டர் பக்கத்தில், சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேதான், நாராயண் ரானேவை பிரபலமான தலைவராக மாற்றினார் என்றும், நாராயண் ரானே மலிவான விளம்பரத்திற்காக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் என்றும் விமர்சித்துள்ளார்.

 

மேலும் நாராயண் ரானேவின் தலையை கொண்டு வருபவருக்கு 51 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ள அருண் பதக், நாராயண் ரானேவின் அஸ்தியை காசியில் கரைக்க விடமாட்டேன் எனவும் கூறியுள்ளார். இது தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அருண் பதக், ஒரு வழக்கு தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்