ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியானா சட்டமன்றத்திற்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 67.90% வாக்குகள் பதிவானது.
ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் அம்மாநிலத்தில், பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் அம்மாநிலத்தில் இன்று (08-10-24) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது காலை 10 மணி வரை முன்னிலை வகித்து வந்த காங்கிரஸ், நேரம் ஆக ஆக பின்னடைவைச் சந்தித்து. தற்போது நிலவரப்படி, பா.ஜ.க 50 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
ஹரியானாவில், தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க, 3வது முறையாக ஆட்சியை பிடிக்கவுள்ளது. இதில், 15 பா.ஜ.க வேட்பாளர்கள், 15 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையில், ஏறுமுகமாகவும், இறங்கு முகமாகவும் இருந்த வினேஷ் போகத், 14வது சுற்றில் பா.ஜ.க வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். 19 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையொட்டி அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனை குற்றம் சாட்டி, பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை வீரர்கள் நடத்தினார்கள். இதனையடுத்து, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இறுதிப் போட்டிக்கு கலந்துகொள்வதற்கு முன்னதாக, உடல் எடை 100 கிராம் அதிகம் இருப்பதாகக் கூறி அவரை 50 கிலோ மல்யுத்த போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் தான், வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக இறுதிவரை போராட்டம் செய்த வினேஷ் போகத், ஹரியானா சட்டப்பேரவைக்குள் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.