உத்திரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ளது சுபய் கிராம். இந்த கிராமத்தில் 6 பட்டியலின வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் ட்ரம்ஸ் வாசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்மையில் அந்த கிராமத்தில் கோவில் திருவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ட்ரம்ஸ் வாசிக்க புஷ்கர் லால் என்ற பட்டியலின சமூகத்தைச் சார்ந்த நபரிடன் கிராம தலைவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், தன்னால் வாசிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், புஷ்கர் லால் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பஞ்சாயத்தின் வழக்கப்படி பட்டியலின் குடும்பங்கள் வனம் மற்றும் நீர் வளங்களைப் பயன்படுத்தவும், கடைகளில் பொருட்கள் வாங்கவும், விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பொது போக்குவரத்தில் பயணிக்கவும், கோவிகளில் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த பஞ்சாயத்து உத்தரவை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது பட்டியலின மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் கிராம தலைவர்கள் ராமகிருஷ்ண காந்த்வால் மற்றும் யாஷ்வீர் சிங் ஆகியோர் மீது ஜோஷிமத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.