ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், புதுச்சேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநருமான கிரண்பேடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பேசுபொருளாகியுள்ளது.
அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கடல் மீது பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரை ராட்சத மீன் ஒன்று துள்ளி எழுந்து வாயால் கவ்வி கடலுக்குள் இழுத்துச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியை நேஷனல் ஜியோகிராபி சேனல் ஒரு மில்லியன் கொடுத்து பதிவு உரிமை பெற்றதாக பொய்யாக உலா வந்த செய்தியை கிரண்பேடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 'வாட்ச் திஸ்' என்று கேப்ஷன் கொடுத்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கிரண் பேடிக்கு அது 2017 ஆம் ஆண்டு வெளியான '5 ஹெட்டெட் ஷார்க் அட்டாக்' என்ற திரைப்படத்தின் காட்சி என்பது தெரிந்திருக்கவில்லை. அத்திரைப்படத்தில் கடல் மேற்பரப்பில் பறக்கும் ஹெலிகாப்டரை ராட்சத மீன் ஒன்று கடலுக்குள் இழுத்துச் செல்வதும், அதனை பார்த்து சுற்றுலா பயணிகள் பயப்படுவது போன்ற காட்சி அமைப்பு இடம்பெற்றிருந்தது.
இந்த காட்சியை உண்மையான காட்சி என கிரண்பேடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். போலி செய்தியை கிரண்பேடி தெரியாமல் பகிர்ந்தது குறித்து டிவிட்டர் பயனர்கள் கிரண்பேடியை 'ட்ரோல்' செய்து வருகின்றனர். சில நிமிடங்களில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்ட கிரண்பேடி, 'இந்த வீடியோ எதற்காக உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் எதற்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது' என மழுப்பும் வகையில் பதிவிட்டார்.
அவர் டிவிட்டரில் இதுபோன்று போலியான தகவல்களைப் பகிர்வது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பே 2019ஆம் ஆண்டு வயதான பெண்மணி நடனமாடும் வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அது '97 வயதில் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகிறார் பிரதமர் மோடியின் தாய்' என பதிவிட்டு இருந்தார். ஆனால் அது மோடியின் தாய் அல்ல என்பது பின்னர் தெரியவந்தது. பொய்யான செய்திகள் என வெளிப்படையாக கிரண்பேடியிடம் டிவிட்டர் பயனர்கள் சுட்டிக்காட்டினாலும் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து எந்த ஒரு பதிவுகளையும் அவர் இதுவரை அகற்றவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.