அதிகாலை மூன்று மணியளவில் எட்டு பேருடன் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நீரோடைக்குள் விழுந்ததில் அதில் பயணம் செய்த ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த எட்டு கூலி தொழிலாளர்களுடன் வேன் ஒன்று இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் மண்டி மாவட்டத்தின் புல்கிரத் பகுதியில் பயணித்துள்ளது. அப்போது, அதிகாலை 3 மணியளவில் சுகேதி காட் நீரோடையை வாகனம் கடக்கையில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து நீரோடைக்குள் விழுந்துள்ளது. இதில் அந்த வேனில் பயணம் செய்த ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், "கட்டிட தொழிலாளிகளான இவர்கள் ஹரியானா ரோட்வேஸ் பேருந்தில் மண்டிக்கு வந்துள்ளனர். அப்போது இவர்கள் அனைவரும் தங்கள் இறங்கவேண்டிய பேருந்து நிறுத்தத்தை தவறவிட்டுள்ளனர். தவறான பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இவர்களை கட்டிட ஒப்பந்ததாரர் வேன் மூலம் பணி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போதே இந்த விபத்து நடந்துள்ளது" எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இமாச்சல பிரதேசத்தின் மண்டியில் ஏற்பட்ட சாலை விபத்து பற்றிய செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.